இந்திய சாதி வரலாறு – குறிப்புகள்

ரியர்கள் வருகை, அதற்கு முன்பு இங்கு இருந்த பழங்குடிகளை அடக்கி அடிமைப்படுத்தியது, அதற்கு முன்பு இருந்த சிந்து சமவெளி நாகரீகம், சாதி வருணாசிரம கட்டமைப்பை உருவாக்கியது, புத்தரின் எதிர்ப்பு, முகலாயர் படையெடுப்பு, ஐரோப்பியர் வருகை, மூலதனத்தின் ஆட்சி, சாதி முறையில் உடைப்பு, ஐரோப்பிய கல்வி முறை, ரசியப் புரட்சி, தேச விடுதலை போராட்டங்கள், போலி சுதந்திரம், நாடு காலனிய சுரண்டலை தொடர்ந்து எதிர்கொள்வது.

மனிதர்கள் வரலாற்றை படைக்கிறார்கள், ஆனால் தமக்குக் கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளின் கீழ்தான் வரலாற்றை படைக்கிறார்கள். எனவே, பொருள்முதல்வாத அடிப்படையிலிருந்து வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டும், அதனுடன் தனிநபர், குழுக்களின் பாத்திரங்களை இணைத்து கற்க வேண்டும்.

இரண்டாவதாக பழங்குடி சமூகங்களின் வாழ்க்கை என்பது சமத்துவமாக சொர்க்க வாழ்க்கை என்று புரிந்து கொள்ளக் கூடாது. அது காட்டுமிராண்டி (savages), அநாகரீகர் (barbarians) என்ற கட்டங்களாகவும், ஒவ்வொன்றிலும் கடை, இடை, தலை என்று மூன்று உள்கட்டங்களாகவும் பிரிக்கின்றனர். இவர்கள் நாகரீக காலத்துக்கு முற்பட்டவர்கள், இவர்களைத்தான் பழங்குடிகள் என்று அழைக்கின்றனர். மிக எளிமையான, புராதன உற்பத்தி கருவிகள், வாழ்க்கை முறை, குழு மனப்பான்மை, குலங்களாக, குடிகளாக பிரிந்து உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது, கொடூர போர்கள் என்பதோடு கரு வடிவில் சுரண்டலும் நிலவுகிறது.

அது உலகெங்கிலும் பழங்குடி புராதன பொதுவுடமை சமூகங்களின் தன்மை. இவற்றில் ஆண் பெண் வேலைப் பிரிவினை, ஆண் பெண் மீது செலுத்தும் ஆதிக்கம், மூளை உழைப்புக்கும் உடல் உழைப்புக்கும் இடையேயான முரண்பாடு, பல்வேறு குழுக்களுக்கிடையே உறவாகவும், பகையாகவும் உறவாடல். குலங்கள், கணங்கள், குடிகள் என்று உட்பிரிவுகள், தனிச்சிறப்பான வழிபாட்டு தெய்வம், வழிபாட்டு முறை, உணவு பழக்கம், சடங்குகள், திருமண உறவுக்கான வரம்புகள் என்று இருக்கின்றன.

இத்தகைய குழுக்களில் இரண்டு பெரும் பிரிவுகள் 1. கால்நடை வளர்ப்பு மேய்ச்சல் நில குடிகள். 2. விவசாய குடிகள்.
இவர்களில் ஆரியர்கள் கால்நடை வளர்ப்பு இனமாக மத்திய ஆசிய ஸ்டெப்பி புல்வெளி பகுதியிருந்து ஐரோப்பா நோக்கியும், இந்தியாவை நோக்கியும் இடம் பெயர்ந்தவர்கள். சுமார் கி.மு 1600 முதல் கி.மு 600 வரை இவர்களது வேதகாலமாக அறியப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் இங்கு இருந்த விவசாய மற்றும் பிற அநாகரீக பழங்குடிகளுடன் கலந்தும் மோதியும் ஒன்றிணைகின்றனர். குறிப்பாக கங்கை சமவெளியில் இருந்த குழுக்களின் சங்கங்களை தோற்கடித்து வர்க்க சமூகத்தை நிலை நாட்டுவதற்கான அரசுகளை நிறுவுகின்றனர். இங்கு வர்க்க சமூகம் என்பது சாதிய சமூகமாக நிலைநாட்டப்படுகிறது. இதற்குள் பார்ப்பன, சத்திரிய, வைசிய வருணங்களும் அவற்றின் சாதிகளும் ஆரிய வருணங்களாகவும் (கால்நடை வளர்ப்பு, வேதம் ஓதுதல், வியாபாரம்), விவசாய சாதிகள்/குடிகள் சூத்திர வருணமாகவும் வகைப்படுத்தப்படுகின்றன. புதிய பழங்குடிகள் வென்று இணைக்கப்படும் போது, அரசு நிறுவப்படும் போது இதே சாதி/வருணாசிரம முறை அமல்படுத்தப்படுகிறது.

வர்க்க வேறுபாடுகள், ஆண் வழி சொத்துடைமை சமூகங்களின் தோற்றத்துக்குப் பிறகு அரசுகளாக, உற்பத்தி உறவுகளை கெட்டிப்படுத்துவது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு அவசியமானதாக இருக்கிறது. இதை எதிர்த்த பௌத்த, சமண மரபுகள், இந்த பார்ப்பன மதமும் பௌத்த, சமண மதங்களும் தென்னிந்தியாவுக்கு வருதல், பார்ப்பன மதம் வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள் மூலம் சுமார் 300-400 ஆண்டு காலத்தில் வர்க்க ஆட்சியை நிறுவியது. இதில் உற்பத்தி முறையானது சாதியக் கட்டுமானத்திலான கிராம சமூகமாகவும், அதில் மூன்று வருணத்தினர் சூத்திர, அவர்ண சாதியினரை கூட்டாக சுரண்டும் அமைப்பாக விளங்குகிறது. அக மண முறை ஆரிய இன தூய்மையை பாதுகாப்பது என்ற நோக்கில் பார்ப்பனர்களால் தொடங்கப்பட்டு பிற குழுக்களுக்கு தவிர்க்க முடியாமல் பரவுகிறது (அம்பேத்கர்)

இது மேற்கு ஐரோப்பாவில் கிரேக்கத்திலும் ரோமாபுரியிலும் தோன்றிய அடிமை அரசுகளிலிருந்தும், ஆண்டான்/அடிமை உற்பத்தி உறவுகளிலிருந்தும் தன்மையில் வேறுபட்டது. இங்கு அரசன், பார்ப்பன மதம், சாதிய குழுக்களைக் கொண்ட உற்பத்தி முறை என்று இயங்குகிறது. இதில் பழங்குடி குழுவின் இணைப்புகளும், தன்மைகளும் தக்க வைக்கப்படுகின்றன. அகமண முறை, உணவுப் பழக்கம், குழுவுக்கான தெய்வம், சடங்குகள், பிற குழுக்களுடனான உறவு ஆகியவை சட்டமாக வகுத்து நிலைநாட்டப்படுகின்றன.

இதை எதிர்த்த போராட்டங்கள், களப்பிரர் பின்னர் குப்தர், பல்லவர் கால மீட்சி, ஆதி சங்கரனின் எதிர்புரட்சி இவற்றோடு சாதிய வருணாசிரம கட்டமைப்பு உச்சகட்டத்தை எட்டுகிறது.

இதைத் தொடர்ந்த கட்டத்தில் இசுலாமியர் வருகை முஸ்லீம்கள் என்ற புதிய சாதியை தோற்றுவிக்கிறது. இசுலாமிய சுல்தான்கள் ஆட்சி, பின்னர் முகலாயர் ஆட்சி அதற்கு எதிரான போராட்டங்கள் என்று வட இந்தியா சிக்கியிருக்கும் போது தக்காணத்திலும், தென் இந்தியாவிலும் மராட்டியர்கள், விஜயநகர பேரரசு, பக்தி இயக்கம், சோழ பேரரசு என்று பார்ப்பன, சைவ, வைணவ இயக்கங்கள் தீவிரமடைகின்றன. இது இந்து சாதிகளுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான எதிர்நிலையின் அடித்தளமாக உள்ளது. இந்த எதிர்நிலை வடமேற்கு இந்தியாவில் மூர்க்கமாகவும், கங்கை சமவெளியில் ஒரு குழுச் சண்டையாகவும், தென் இந்தியாவில் கிட்டத்தட்ட நட்பாகவும் நிலவுகிறது.
இந்த நிலையில்தான் ஐரோப்பியர் வருகை நிகழ்கிறது. ஆங்கிலேயர் நாடு பிடித்தல், காலனியாக்கல், உபரியை சுரண்டல், கல்வி, மதம், நிர்வாக முறையை புகுத்துதல் ஆகியவை சாதிய கட்டமைப்பில் உடைப்புகளை ஏற்படுத்தினாலும், இதை முழுவதுமாக உடைப்பது அவர்களது நோக்கமாகவோ தேவையாகவோ இருக்கவில்லை. சாதிகளுக்கிடையே மேலே, கீழே நகர்வுகள் ஏற்பட்டாலும் அது சாதிய கட்டமைப்பை தகர்க்கவோ, அழிக்கவோ செய்து விடவில்லை. மேற்கு ஐரோப்பிய தனிநபர் கலாச்சரம், தனிச்சொத்துடைமை ஆகியவை புகுத்தப்பட்டாலும் அவை சாதிய கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டன.

இத்தோடு மாநில உரிமை, தேசிய இனப் பிரச்சனையும் இணைகின்றன. இவைதான் இன்றைய இந்தியாவின் முக்கியமான 4 பிரச்சனைகள், சாதிய தாக்குதல்கள், இசுலாமிய வெறுப்பு அரசியல், மூலதனத்தின் சுரண்டல், மாநிலங்கள் உரிமை பற்றிய பிரச்சனை ஆகியவை. இவற்றின் அடிப்படையில்தான் போர்தந்திரமும், செயல்தந்திரமும் பற்றி பேச முடியும்.

Leave a comment