நவீன முதலாளித்துவ பொருளாதாரம்

பயன்-மதிப்பு – தனி நபருக்கோ, சமூகத்துக்கோ பலனளிக்கக் கூடிய பொருள் அல்லது சேவை. தனிநபருக்கு பலனளிப்பதாக இருப்பது சமூகத்துக்கு கேடானதாகவோ அல்லது தனிநபருக்கு கேடானது சமூகத்துக்கு பலனளிப்பதாகவோ கூட இருக்கலாம்.

இலவசமாக எதுவும் இல்லை என்ற கோட்பாடு – நாம் சுவாசிக்கும் காற்று இலவசமாக, எந்த விலையும் கொடுக்காமல் கிடைக்கிறது. அதன் பயன்-மதிப்பு நிறைய இருக்கிறது.

அதே காற்றை ஒரு பாட்டிலில் பிடித்து ஆக்சிஜன் பார்லர் என்ற பெயரில் சுவாசிக்கக் கொடுத்தால், அந்த பாட்டிலைச் செய்ய, ஆக்சிஜனை பிரித்து அடைக்க, பார்லர் கட்ட, பார்லரை நடத்த செலவாகும் உழைப்புக்கு சமதையை விலையாகக் கொடுக்கிறோம்.

எனவே, ஒரு பொருளின் பயன்-மதிப்புக்கும் அதற்கு விலையாக எவ்வளவு கொடுக்கிறோம் என்பதற்கும் அடிப்படையான வேறுபாடு உள்ளது. இரண்டும் தொடர்புடையவை ஆனால் ஒன்று இல்லை.

இப்போது கச்சா எண்ணெயை எடுத்துக் கொள்வோம். அது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மேற்பரப்பில் இருந்த கரிமப் பொருட்கள் பூமிக்கடியில் புதைந்து வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் அழுகிப் போய் ஹைட்ரோ கார்பன்களாக மாறியுள்ளன.

இந்தப் படிவுகளை கண்டுபிடிப்பது முதல் படி

இந்தப் படிவுகளை தனி உடைமையாக்கிக் கொள்வது இரண்டாவது படி

அவற்றை இறைத்து எடுத்து, சுத்திகரித்து, பொருட்களாக பிரிப்பது மூன்றாவது படி

சுத்திகரிக்கப்பட்டு பிரிக்கப்பட்ட பொருட்களை பொதிந்து, பல்வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று விற்பது நான்காவது படி.

இதில் எண்ணெய் இருத்தலைக் கண்டுபிடிப்பதற்கு உழைப்பு செலவிடப்படுகிறது, கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. எண்ணெயை மண்ணுக்கடியில் இருந்து அல்லது கடலுக்கடியில் இருந்து இறைத்து எடுப்பதற்கும் கடந்த கால உழைப்பின் விளைபயனான துரப்பணக் கருவிகள் தேவைப்படுகின்றன. அதன் பிறகு எண்ணெய் சுத்திகரிப்புக்கும் முதலீடு செய்யப்படுகிறது. கடைசியாக எண்ணெய் பொருட்களை பொதிந்து வினியோகத்துக்கு அனுப்பும் போக்குவரத்துக்குச் செலவாகிறது.

இந்தச் செலவுகளுக்கு எல்லாம் மேலாக, 2 அல்லது 3 மடங்கு விலை வைத்து விற்பது கச்சா எண்ணெய் வளங்களை ஏகபோகமாக வைத்திருப்பதன் மூலமும், கச்சா எண்ணெய் பயன்பாட்டை தொடர்ந்து அதிகரிப்பதை உறுதி செய்யும் சமூக நடவடிக்கைகளாலும் சாத்தியமாகிறது.

1. கச்சா எண்ணெய் பொருட்களுக்கான வேண்டல் போதுமான அளவு இருக்க வேண்டும். கார்களுக்கு பெட்ரோல், பேருந்துகள், ரயில்களுக்கு டீசல், வீட்டில் சமையலுக்கு எரிவாயு, பிளாஸ்டிக் பொருட்களுக்கான மூலப் பொருட்கள் என்று இந்தத் திசையில் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

2. இந்த வேண்டலுக்கு ஈடு கொடுப்பதை விடக் குறைந்த அளவு உற்பத்தியை மட்டும் உறுதி செய்வது. இதை எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு மூலமாக அது செய்யப்படுகிறது. உலகச் சந்தையில் எண்ணெய் வழங்கலை கட்டுப்படுத்தி விலையை உயர்த்திக் கொள்வது.

இந்த இரண்டின் இணைவும் சேர்ந்து ஒட்டு மொத்த சமூக உழைப்பின் அதிக பங்கை எண்ணெய் நிறுவனங்களும், எண்ணெய் வளங்களை தனியுடைமையாக வைத்திருப்பவர்களும் கைப்பற்றிக் கொள்ள உதவுகிறது.

எண்ணெய் விலை குறிப்பிட்ட அளவுக்கு மேலே போனால், மாற்று எரிபொருட்கள், மாற்று எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்தும் சாத்தியங்கள் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $80-க்கு அதிகமாகப் போனால் அமெரிக்காவில் ஷேல் எண்ணெய் எடுக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தக் கூடியதாக ஆகிறது. இந்தியாவிலும் மீத்தேன் எடுப்பதற்கான திட்டங்கள் சூடு பிடிக்கத் தொடங்குகின்றன. எண்ணெய் விலை $50-க்குக் கீழே போய் விட்டால் மாற்று ஆதாரங்கள் கட்டுப்படியாகாமல் போய் விடுகின்றன.

எனவே, இந்த ஏகபோக லாபம் அல்லது உபரி லாபம் அல்லது ஏகபோக வாடகை என்பது குறிப்பிட்ட பொருளாதார வரம்புக்குள், வரையறுக்கப்பட்ட அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் மூலம், அவற்றை கட்டுப்படுத்தி இயக்குவதன் மூலம் பெறப்படுகிறது.

இப்போது தரவுகளுக்கு வருவோம். மின்னணு சேவைகளை வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கி பராமரிக்கும் நிறுவனங்கள், இந்தச் சேவைகளை பயன்படுத்துபவர்களிடமிருந்து நேரடியாகவோ அல்லது அவர்கள் அறியாமலேயே பல தரவுகளை பெறுகின்றன.

1. கட்டமைப்பு உருவாக்க முதலீடு செய்யப்படுகிறது.

2. செயலிகளை உருவாக்க உழைப்பு செலவிடப்படுகிறது.

3. கட்டமைப்பை பராமரிக்கவும் செயலிகளை மேம்படுத்திக் கொண்டே செல்லவும் உழைப்பு செலவாகிறது.

4. சேவைகள் வழங்குவதை தொடர்ந்து கண்காணித்து பராமரிப்பதற்கு உழைப்பு செலவிடப்படுகிறது.

இந்தச் சேவைகளும், இதிலிருந்து பெறப்படும் தனிநபர் தரவுகளும் வலைப்பின்னல் விளைவு கொண்டவை. உதாரணமாக, ஒரு நாட்டில் ஒரே ஒருவரிடம் தொலைபேசி இருந்தால் அதனால் அவருக்கு எந்தப் பலனும் இல்லை. இன்னும் ஒருவர் தொலைபேசி வைத்திருந்தால் இருவர் மட்டும் பேசிக் கொள்ளலாம். மூன்றாவது நபர் தொலைபேசி பெற்றால், இந்த மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளலாம்.

1 – 0 தொடர்பு

2 – 1 தொடர்பு

3 – 3 தொடர்புகள்

4 – 6 தொடர்புகள்

இதனை வலைப்பின்னல் விளைவு என்று சொல்லலாம்.

நீராவி எந்திரத்தை கண்டுபிடித்ததும் அதனை ஆலைகளில் பயன்படுத்தியதும் தொழிற்புரட்சிக்கும் உற்பத்திப் பொருட்களை அதிக அளவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்வதற்கும் இட்டுச் சென்றது. அடுத்த முக்கியமான கண்டுபிடிப்பு மின்சாரம் கண்டுபிடிப்பு. மூன்றாவதாக கணினி தகவல் தொழில்நுட்பம் என்கிறார்கள். நான்காவதாக, செயற்கை நுண்ணறிவு என்கிறார்கள்.

முதல் இரண்டையும் முதல் தொழில்புரட்சிக்குள் அடக்கலாம். இரண்டாவது இரண்டையும் இரண்டாவது தொழிற்புரட்சிக்குள் அடக்கலாம். இருந்தாலும் வேறுபாடுகள் உள்ளன.

மின்சாரம் – தந்தி தொடர்பு – தொலைபேசி – மின் உற்பத்தி – வினியோகம் ஆகியவை. (அலெக்சாண்டர் கிரஹாம் பெல் – ஸ்காட்லாந்து 1847 முதல் 1922)

வாகன உற்பத்தியைப் பொறுத்தவரை அது தொழில்துறை உற்பத்தியையும், அதற்கான ஆற்றல் ஆதாரத்தை மாற்றுவதை மட்டுமே சார்ந்திருக்கிறது.

எந்திரங்கள் கருவிகளை தொழிலாளர் கையிலிருந்து எடுத்துக் கொள்வது போல என்ன சாராம்சமான மாற்றம் நடைபெறுகிறது.

வாகனங்களில் குதிரைகளுக்கு பதிலாக உள்ளுறை எரிசக்தி எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மற்றபடி ஓட்டுபவர், பயணிப்பவர் என்ற வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.

எந்திரங்கள் மனிதர்களின் கைகளையும் கால்களையும் நீட்டியது போல இங்கு நடைபெறவில்லை. குதிரை வண்டி செய்த அதே விஷயத்தை அளவு ரீதியாக அதிகரித்திருக்கிறது.

அந்த அளவு அதிகரிப்பு பண்புரீதியாக விமானம் என்று மாறும் போது அது புதிய சாத்தியங்களை உருவாக்கியுள்ளது.

தகவல் தொடர்பில் டெலிகிராபும், தொலைபேசியும் மனிதர்களின் குரலை நீட்டித்திருக்கின்றன. இது ஒரு பண்புரீதியான மாற்றம். அதே மனிதர்கள் பேசுகிறார்கள், ஆனால் அவை உலகத்தின் மறுமுனைக்குக் கூட அனுப்பபட முடிகின்றன.

டெலிகிராப் என்பது எழுத்துக்களை மின் ஓசைகளாக கட்-கடா என்று மாற்றி அனுப்பும் குறியீட்டு முறை மட்டுமே. குறியீடுகளை வெகு தொலைவுக்கு அனுப்ப முடிந்திருக்கிறது.

மின்சாரத்தின் கண்டுபிடிப்பை நீராவி எஞ்சினின் கண்டுபிடிப்புக்கு நிகராகச் சொல்லலாம். கணினி, மின்னணு தொழில்நுட்பத்தின் கண்டு பிடிப்பு முதலில் கணக்கீடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் பிறகு மின்சாரத்தின் கண்டுபிடிப்போடு இணைக்கப்பட்டு இணையம் உருவாக்கப்படுகிறது. கணினிகள் இணைக்கப்படுகின்றன. எழுத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

அதற்கு முன்னரே பாடல்களும், திரைப்படங்களும் மின்சாரத்தின் உதவியால் சேமிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு மறுபடியும் உருவாக்கப்படுகின்றன. அது கணினியோடு இணைக்கப்பட்டு பாடலும், காட்சிகளும் உருவாக்கப்படுவதும், மாற்றியமைக்கப்படுவதும் அனுப்பப்படுவதும் சாத்தியமாகிறது.

இதனை மூன்றாம் தொழிற்புரட்சி என்று சொல்லலாம். இதனை தொழில்துறைக்கு பிந்தைய பொருளாதாரம் என்றும் சொல்கிறார்கள்.

தொலைபேசி பயன்பாட்டில் மனிதர்களுக்கிடையே தொடர்பு ஏற்படுத்தப்பட்டாலும் அதன் மூலம் கிடைக்கும் தரவுகளை சேமித்து வைப்பதற்கோ, அவற்றை பெருமளவு திரட்டி பகுப்பாய்வு செய்வதற்கோ வாய்ப்புகள் குறைவாக இருந்தன.

Leave a comment