ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சகட்டம்

“ஐரோப்பாவில் புதிய முதலாளித்துவம் [ஏகாதிபத்தியம்] பழைய முதலாளித்துவத்தை திட்டவட்டமாக அகற்றிவிட்ட காலம்… இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமாகும்”

1. தொழில்துறையில் ஏகபோகங்கள்

“விற்பனையில் நிபந்தனைகள், பணம் செலுத்துவதற்கான கெடுக்கள் முதலியவை பற்றி கார்ட்டல்கள் ஒப்பந்தத்திற்கு வருகின்றன. சந்தைகளை தங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்கின்றன. உற்பத்தி செய்யப்பட வேண்டிய பண்டங்களின் அளவை நிர்ணயிக்கின்றன. விலைகளை நிர்ணயிக்கின்றன. பற்பல தொழில் நிலையங்களுக்கிடையில் லாபங்களைப் பிரித்துக் கொள்கின்றன.” (பக்கம் 33)

“போட்டியானது ஏகபோகமாக மாற்றமடைந்து வருகிறது. உற்பத்தியின் சமூகமயமாக்கம் இதன் விளைவாகப் பிரமாதமாக முன்னேறியுள்ளது. குறிப்பாக, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் மேம்பாடுமாகிய வளர்ச்சிப் போக்கு சமூகமயமாக்கப்படுகிறது” (பக்கம் 38)

“முதலாளித்துவம் அதன் ஏகபோகக் கட்டத்தில் உற்பத்தியானது மிக விரிவான அளவில் சமூகமயமாக்கப்படுவதற்கு இட்டுச் செல்கிறது; முதலாளிகளை, அவர்களது விருப்பத்துக்கும் உணர்வுக்கும் மாறாக, ஒரு வகைப் புதிய சமுதாய முறையினுள் அறவே தடையில்லாப் போட்டியிலிருந்து முற்றும் சமூமயமாக்கப்படுதலுக்கு [சோசலிசம்] மாறிச் செல்வதற்கான இடைநிலையாகிய ஒன்றினுள் இழுத்துச் செல்கிறது” (பக்கம் 39)

“உற்பத்தியானது சமூகமயமாகிறது, ஆனால் சுவீகரிப்பு தொடர்ந்து தனியார் வசமே உள்ளது. சமுதாய உற்பத்திச் சாதனங்கள் தொடர்ந்து ஒரு சிலரது தனிச்சொத்தாகவே இருக்கின்றன. சம்பிரதாய முறையில் அங்கீகரிக்கப்படும் தடையில்லாப் போட்டியின் பொதுவான கட்டமைப்பு நீடிக்கிறது; அதே போது ஏகபோகக் காரர்கள் ஒரு சிலர் ஏனைய மக்கள் தொகையோரின் மீது செலுத்தும் ஒடுக்குமுறை ஆதிக்கம் நூறு மடங்கு மேலும் கடுமையானதாய், அழுத்துவதாய், சகிக்க முடியாததாய் ஆகிறது” (பக்கம் 30)

“பண்ட உற்பத்தி இன்னும் ‘ஆட்சி புரிந்தாலும்’, பொருளாதார வாழ்வின் அடிப்படையெனத் தொடர்ந்து கருதப்பட்டாலும், அதன் அடித்தளம் உண்மையில் பறிக்கப்பட்டு, லாபங்களில் பெரும்பகுதி நிதி தில்லுமுல்லுக்கார ‘மேதை’களுக்குச் சென்று விடும் ஒரு கட்டத்தை முதலாளித்துவ வளர்ச்சியானது வந்தடைந்துள்ளது” (பக்கம் 41)

“… பிற்போக்குக் குட்டிமுதலாளித்துவ விமர்சகர்கள் ’தடையில்லாத’, ‘அமைதியான’, ‘நாணயமான’ போட்டிக்குத் திரும்புவது குறித்து கனவு காண்கிறார்கள்” (பக்கம் 41)

“மூலப் பொருள்களை (அரைகுறை செய்பொருள்களையல்ல) பதனிடும் தொழில்களில் கார்ட்டல்கள் அமைக்கப்படுவதனால், இறுதிச் செய் பொருள் உற்பத்தித் தொழில்களுக்குப் பாதகமாக, உயர்ந்த லாபங்களின் வடிவில் அனுகூலங்கள் பெறுவதோடு மட்டுமின்றி, இறுதிச் செய்பொருள் உற்பத்தித் தொழில்களின் மீது மேல் ஆதிக்க நிலையையும் பெற்று விடுகின்றன. இது தடையில்லாப் போட்டியின் கீழ் இருந்திராத ஒன்றாகும்” (பக்கம் 42)

“தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மிதமிஞ்சிய துரித வேகமானது தேசப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கிடையில் ஏற்றத்தாழ்வுக்கும், அராஜகத்துக்கும், நெருக்கடிகளுக்குமான கூறுகளை மேலும் மேலும் அதிகமாகத் தோற்றுவிக்கிறது” (பக்கம் 45)

“ஏகபோகம் – ‘முதலாளித்துவ வளர்ச்சியின் மிக அண்மைய கட்டத்தில்’ இதுவேதான் இறுதி முடிவாய்க் கூறக்கூடிய சொல்.” (பக்கம் 46)

2. வங்கிகளும் அவை ஆற்றும் புதிய பங்கும்


“வங்கித் தொழில் வளர்ந்து சிறிய எண்ணிக்கையிலான நிறுவனங்களில் ஒன்று குவியும்போது, வங்கிகள் சாமான்ய இடைத்தரகரின் நிலையிலிருந்து வளர்ந்து சக்திவாய்ந்த ஏகபோகங்களாகி, எல்லா முதலாளிகள் வசமும் சிறு தொழில், வாணிபத் துறையினர் வசமும் உள்ள பண மூலதனத்தில் அனைகமாய் அனைத்தையும், மற்றும் குறிப்பிட்ட ஒரு நாட்டிலும் மற்றும் பல நாடுகளிலுமுள்ள உற்பத்திச் சாதனங்கள், மூலப்பொருள் ஆதாரங்களில் பெரும்பகுதியையும் தங்களது பிடிக்குள் கொண்டனவாகி விடுகின்றன. எண்ணிறந்த சாமான்ய இடைத்தரகர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய சொற்ப ஏகபோகக்காரர்களாக இப்படி மாற்றம் பெறுவது, முதலாளித்துவமானது முதலாளித்துவ ஏகாதிபத்தியமாக வளர்வதன் அடிப்படையான நிகழ்ச்சிப் போக்குகளில் ஒன்றாகும்.” (பக்கம் 47)

“சொற்ப சில ஏகபோகக்காரர்கள், தங்களது வங்கித் தொழிலின் மையமான தொடர்புகள் வாயிலாகவும் நடப்புக் கணக்குகள் வாயிலாகவும் ஏனைய நிதிச் செயல்பாடுகள் வாயிலாகவும் பல்வேறு முதலாளிகளின் நிதி நிலைமையை முதற்கண், கறாராகத் தெரிந்து கொள்ளவும், பிறகு அவர்களைக் கட்டுப்படுத்தவும், கடன் வசதிகளைச் சுருக்கியோ, பெருக்கியோ, எளிதில் கிடைக்கச் செய்தோ, கிடைக்காதபடி இடையூறு செய்தோ அவர்களைத் தங்களது செல்வாக்கின் கீழ் கொண்டு வரவும், முடிவில் முழு அளவுக்குத் தாமே அவர்களது கதியைத் தீர்மானிக்கவும்

அவர்களது வருவாயை நிர்ணயிக்கவும், அவர்களுக்கு மூலதனம் இல்லாதபடிச் செய்யவும், அல்லது அவர்களது மூலதனம் விரைவாகப் பிரம்மாண்ட பரிமாணங்களுக்கு அதிகரிக்க அனுமதிக்கவும், இன்ன பலவும் செய்ய முடிகிறது” (பக்கம் 55)

“பழைய முதலாளித்துவம், அத்தியாவசியமான தனது ஒழுங்கியக்கியாகிய பங்கு மாற்றுச் சந்தையுடன் கூடிய, தடையில்லாப் போட்டிக்குரிய முதலாளித்துவம் மறைந்து வருகிறது. அதனிடத்தில் ஒரு புதிய முதலாளித்துவம், விரைவில் மாற்றமடையும் [சோசலிசமாக] ஒன்றுக்குரிய அப்பட்டமான இயல்புகளுடன் கூடிய, தடையில்லாப் போட்டி, ஏகபோகம் இரண்டின் கலவையான ஒரு புதிய முதலாளித்துவம் வந்து அமர்ந்துள்ளது” (பக்கம் 62)

“பழைய முதலாளித்துவம் காலம் கடந்ததாகி விட்டது. புதிய முதலாளித்துவம் வேறொன்றை [சோசலிசத்தை] நோக்கி மாறிச் செல்வதற்கான இடைநிலைக் கட்டத்தைக் குறிக்கிறது. ஏகபோகத்தைத் தடையில்லாப் போட்டியுடன் ‘இணக்கம் கொள்ளச்’ செய்வதற்குரிய ‘நிலையான கோட்பாடுகளையும் திட்டவட்டமான குறிக்கோளையும்’ தேடிப் பயனில்லைதான்” (பக்கம் 72)

3. நிதி மூலதனமும் நிதியாதிக்கக் கும்பலும்

“உற்பத்தியின் ஒன்றுகுவிப்பு; அதிலிருந்து ஏகபோகம் எழுதல்; வங்கிகள் தொழில்துறையுடன் இணைதல் அல்லது ஒன்றுகலத்தல் – இதுதான் நிதி மூலதனத்தின் உதயத்தினுடைய வரலாறு; இதுதான் நிதி மூலதனம் என்ற கருத்தினத்தின் உள்ளடக்கம்” (பக்கம் 74)

“ஒருசிலரது கைகளில் ஒன்றுகுவிந்து நடைமுறையில் ஏகபோக நிலை வகிக்கும் நிதி மூலதனமானது கம்பெனிகளை முன்னேற்றுதல், பங்குகளை வெளியிடுதல், அரசாங்கக் கடன்கள் முதலானவற்றின் மூலம், இடையறாது தொடர்ந்து அதிகரிக்கும் பிரம்மாண்ட லாபங்களை மூட்டை கட்டிக் கொள்கிறது; நிதியாதிக்கக் கும்பலின் ஆதிபத்தியத்தை வலுவாக்கிச் செல்கிறது; மற்றும் ஏகபோகக்காரர்களின் ஆதாயத்துக்காகச் சமுதாயம் முழுவதிலுமிருந்து கப்பம் வசூலிக்கிறது.” (பக்கம் 85)

“நிதி மூலதனத்தின் பிரதான செயல்களில் ஒன்றாகிய பத்திர வெளியீட்டிலிருந்து மிதமிஞ்சி உயர் விகிதத்தில் கிடைக்கும் லாபமானது, நிதியாதிக்கக் கும்பலை வளர்த்திடுவதற்கும் வலுவாக்குவதற்கும் மிக முக்கிய பங்காற்றுகிறது” (பக்கம் 87)

“தொழில் உயர்வேற்றக் காலங்களில் நிதி மூலதனத்தின் லாபங்கள் அளவுகடந்து அதிகரிக்கின்றன; ஆனால் மந்தக் காலங்களில் திடமில்லாத, சிறிய தொழில் நிலையங்கள் இல்லாதொழிகின்றன” “நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நிறுவனங்களைப் ‘புனர்நிர்மாணம்’ செய்கையில் ‘பங்கு மூலதனம் குறைத்து எழுதப்படுகிறது’” (பக்கம் 88)

“துரிதமாக வளர்ந்து வரும் பெரிய நகரங்களின் சுற்று வட்டாரங்களில் இருக்கும் நிலங்களின் ஊக வாணிகம் செய்வது நிதி மூலதனத்துக்குக் குறிப்பிடத்தக்க அளவுக்கு லாபகரமான செயற்பாடாய் அமைகிறது. இங்கு வங்கிகளது ஏகபோகம் நிலவாடகை ஏகபோகத்துடனும், போக்குவரத்துச் சாதனங்களது ஏகபோகத்துடனும் ஒன்றிணைகிறது; (பக்கம் 91)

“ஏகபோகமானது அது நிறுவப்பட்டு நூற்றுக்கணக்கான கோடிகளைத் தன் பிடிக்குள் கொண்டு வந்தவுடன், அரசாங்கங்கத்தின் வடிவமும், ஏனைய எல்லா ‘விவரங்களும்’ எப்படி இருப்பினும் தவிர்க்க முடியாத வகையில் பொது வாழ்வின் ஒவ்வொரு துறையினுள்ளும் ஊடுருவி விடுகிறது” (பக்கம் 92)

“மூலதன உடைமையானது, உற்பத்தியில் மூலதனத்தைச் செயற்படுத்துவதிலிருந்து பிரிக்கப்பட்டிருப்பதும், பண மூலதனமானது தொழில் துறையிலான அல்லது உற்பத்தித் திறனுள்ள மூலதனத்திலிருந்து பிரிக்கப்பட்டிருப்பதும், முழுதும் பண மூலதனத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை சுகஜீவி, தொழில் முனைப்பாளரிடமிருந்தும் மூலதனத்தின் நிர்வாகத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட எல்லோரிடமிருந்தும் பிரிக்கப்பட்டிருப்பதும் பொதுவாக முதலாளித்துவத்தின் குணாதிசயமாகும்” (பக்கம் 94)

“ஏகாதிபத்தியம் அல்லது நிதி மூலதன ஆதிக்கம் என்பது இந்தப் பிரிவினை மிகப் பெரும் அளவுகளுக்கு அதிகரித்து விடும் முதலாளித்துவத்தின் உச்சகட்டமாகும். மூலதனத்தின் ஏனைய எல்லா வடிவங்களின் மீதும் நிதி மூலதனம் தலைமையதிகாரம் பெறுவதானது முதலீட்டாளரும் நிதியாதிக்கக் கும்பலும் தலைமையாதிபத்தியம் பெறுவதைக் குறிக்கிறது; நிதித் துறையில் “சக்தி வாய்ந்தவையாக” இருக்கும் சொற்ப எண்ணிக்கையிலான அரசுகள் ஏனைய எல்லா அரசுகளிலும் உயர்ந்தனவாய் தனித்த நிலை பெறுவதை இது குறிக்கிறது” (பக்கம் 95)

4. மூலதன ஏற்றுமதி

“தடையில்லாப் போட்டி தனியாட்சி புரிந்த பழைய முதலாளித்துவத்தின் குறிப்பண்பாய் இருந்தது பண்டங்களின் ஏற்றுமதி. ஏகபோகங்கள் ஆட்சி செய்யும் புதிய முதலாளித்துவத்தின் இன்றைய கட்டத்தின் குறிப்பண்பாய் இருப்பது மூலதனத்தின் ஏற்றுமதி” (பக்கம் 97)

“முதலாளித்துவம் முதலாளித்துவமாகவே இருக்கிறவரை, உபரி மூலதனமானது அந்த நாட்டின் மக்கள் பெருந்திரளினரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகப் பயன்படுத்தப்பட மாட்டாது. ஏனென்றால் அது முதலாளிகளின் லாபங்களைச் சரிந்து விழச் செய்வதாகி விடும்; லாபங்களை அதிகமாக்கும் பொருட்டு பிற்பட்ட நாடுகளுக்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்வதற்கே உபரி மூலதனம் பயன்படுத்தப்படும்” (பக்கம் 99)

“மூலதனத்தின் ஏற்றுமதி, எந்த நாடுகளுக்கு அது ஏற்றுமதி செய்யப்படுகிறதோ அந்நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியின் மீது செல்வாக்கு செலுத்துகிறது, இந்த வளர்ச்சியை வெகுவாகத் துரிதப்படுத்துகிறது. ஆகவே மூலதன ஏற்றுமதியானது, மூலதன-ஏற்றுமதி நாடுகளின் வளர்ச்சியை ஓரளவுக்கு தடைப்படுத்தக் கூடும் என்றாலும், உலகெங்கும் மேலும் தொடர்ந்து முதலாளித்துவம் காணும் வளர்ச்சியை விரிவுபடுத்தியும் ஆழமாக்கியும் செல்வதன் மூலமே இதனைச் செய்ய முடியும்” (பக்கம் 102-3)

“நிதி மூலதனம் ஏகபோகங்களது சகாப்தத்தைத் தோற்றுவித்திருக்கிறது. ஏகபோகங்கள் ஏகபோகத்துக்குரிய கோட்பாடுகளை எங்கும் செயல்பட வைக்கின்றன; பகிரங்கச் சந்தைப் போட்டிக்குப் பதில், லாபகரமான பேரங்களுக்காகத் “தொடர்புகள்” பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. கொடுக்கப்படுகின்ற கடனில் ஒரு பகுதி, கடன் தருகிற நாட்டிலிருந்து பொருள்கள் வாங்குவதற்காக, குறிப்பாகப் போர்த் தளவாடங்கள் அல்லது கப்பல்கள் போன்றவற்றை வாங்குவதற்காக செலவிடப்பட வேண்டுமென நிபந்தனை இடுவது மிகவும் சகஜமாகி விட்டது” (பக்கம் 104)

5. முதலாளித்துவக் கூட்டுகளிடையே உலகம் பங்கிடப்படுதல்

“மாறுகிறவையும் ஒப்பளவில் பிரத்தியேகமானவையும் தாற்காலிகமானவையும் ஆகிய காரணங்களுக்கு ஏற்ப, போராட்டத்தின் வடிவங்கள் மாறக் கூடும், இடையறாது மாற்றமடையவும் செய்கின்றன. ஆனால், போராட்டத்தின் சாராம்சம், அதன் வர்க்க உள்ளடக்கம், வர்க்கங்கள் இருந்து வரும் வரை நிச்சயம் மாற்றமடைய முடியாது. இன்றையப் பொருளாதாரப் போராட்டத்தின் சாராம்சத்தை (உலகின் பங்கீட்டை) மறைப்பதும், இப்போராட்டத்தின் ஒரு வடிவத்தை ஒரு சமயமும் இன்னொரு வடிவத்தை இன்னொரு சமயமும் வலியுறுத்துவதும், உதாரணமாக ஜெர்மன் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கே இயற்கையான உகந்தனவாகும்.” (பக்கம் 119)

“முதலாளித்துவத்தின் மிக அண்மைய கட்டத்துக்குரிய இந்தச் சகாப்தம் நமக்குத் தெளிவுபடுத்துவது என்னவெனில் : உலகின் பொருளாதாரப் பங்கீட்டின் அடிப்படையில் முதலாளித்துவக் கூட்டுகளிடையே குறிப்பிட்ட சில உறவுகள் வளர்கின்றன; அதேபோது இதற்கு இணைவாகவும் இதனுடன் தொடர்பு கொண்டும் உலகின் பிரதேசப் பங்கீட்டின் அடிப்படையில், காலனிகளுக்கான போராட்டத்தின், ‘செல்வாக்கு மண்டலங்களுக்கான போராட்டத்தின்’ அடிப்படையில் அரசியல் கூட்டணிகளுக்கிடையில், அரசுகளுக்கிடையில் குறிப்பிட்ட சில உறவுகள் வளருகின்றன என்பதுதான்.” (பக்கம் 120)

6. வல்லரசுகளுக்கிடையே உலகம் பங்கிடப்படுதல்

“உலகமானது முதன்முதலாக இப்போது முழு அளவுக்கு பங்கிட்டுக் கொள்ளப்பட்டு விட்டது, ஆகவே இனி வருங்காலத்தில் மறுபங்கீடு மட்டுமேதான் சாத்தியம்” (பக்கம் 121)

“ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மூலப் பொருள் ஆதாரங்களில் மட்டுமின்றி, இனி உருவாக்கப்படக் கூடியவற்றிலும் நிதி மூலதனம் அக்கறை கொண்டுள்ளது.” (பக்கம் 133)

“’நிதி மூலதனம் சுதந்திரத்தை விரும்பவில்லை, ஆதிக்கத்தையே விரும்புகிறது’” (பக்கம் 135)

“… நிதி மூலதனமும் அதன் அயல்நாட்டுக் கொள்கையும் அரசுச் சார்புநிலையின் பல இடைநிலை வடிவங்களைத் தோற்றுவிக்கின்றன…. காலனி உடைமை நாடுகள் என்றும் காலனிகள் என்றும் நாடுகளிடையிலான பிரதான தொகுதிகள் மட்டுமின்றி, அரசியல் துறையில் பெயரளவில் சுயேச்சையானவை என்றாலும் உண்மையில் நிதித்துறை, அரசுத் தந்திரத் துறை சார்புநிலை என்னும் வலைப்பின்னலால் கட்டுண்டிருக்கும் சார்பு நாடுகளின் பல்வேறு வடிவங்களும் இச்சகாப்தத்துக்குரிய இனமாதிரியானவை ஆகும்” (பக்கம் 136)

7. முதலாளித்துவத்தின் தனியொரு கட்டமாகிய ஏகாதிபத்தியம்

“பொதுவாக முதலாளித்துவத்தின் அடிப்படை குணாதிசயங்களின் வளர்ச்சியாகவும், நேரடியான தொடர்ச்சியாகவும் ஏகாதிபத்தியம் எழுந்தது. ஆனால் முதலாளித்துவம் அதன் வளர்ச்சியில் திட்டவட்டமான, மிக உயர்ந்த கட்டத்தில்தான் முதலாளித்துவ ஏகாதிபத்தியமாக மாறியது; இக்கட்டத்தில்தான் முதலாளித்துவத்தின் சில அடிப்படை குணாதிசயங்கள் அவற்றின் நேர் எதிரானவையாக மாற ஆரம்பித்தன; முதலாளித்துவத்திலிருந்து மேலான சமுதாய அமைப்புக்கு [சோசலிசத்துக்கு] மாறிச் செல்வதற்கான காலத்தினுடைய இயல்புகள் உருப்பெற்று எழுந்து எல்லாத் துறைகளிலும் தம்மை வெளிக்காட்டிக் கொண்டன.

பொருளாதார வழியில் இந்த நிகழ்ச்சிப் போக்கின் மிக முக்கிய அம்சம், தடையில்லா முதலாளித்துவப் போட்டி அகற்றப்பட்டு அதனிடத்தில் முதலாளித்துவ ஏகபோகம் எழுந்ததுதான். தடையில்லாப் போட்டிதான், முதலாளித்துவத்துக்கும் பொதுவாகப் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்திக்குமுரிய அடிப்படை இயல்பு; ஏகபோகம் தடையில்லாப் போட்டிக்கு நேர் எதிரானதாகும். ஆனால் தடையில்லாப் போட்டி நம் கண்முன்னால் ஏகபோகமாக மாற்றப்படக் கண்டோம்.”

“தடையிலாப் போட்டியிலிருந்து வளர்ந்தெழுந்த இந்த ஏகபோகங்கள் அதேபோது போட்டியை அகற்றிவிடவில்லை, போட்டிக்கு மேலும் அதனுடன் கூடவும் நிலவுகின்றன, இவ்வழியில் மிகுந்த கடுமையும் உக்கிரமும் வாய்ந்த மிகப் பல முரண்பாடுகளையும் பூசல்களையும் மோதல்களையும் தோற்றுவிக்கின்றன. ஏகபோகமானது முதலாளித்துவத்திலிருந்து அதைவிட மேலானதொரு அமைப்புக்கு [சோசலிசத்துக்கு] மாறிச் செல்வதாகும்” (பக்கம் 141)

“முதலாளித்துவத்தின் ஏகபோகக் கட்டமே ஏகாதிபத்தியம் என்று கூற வேண்டும்” (பக்கம் 141)

“முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக் கட்டத்தில் ஏகபோகங்கள், நிதி மூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு விடுகிறதோ, மூலதன ஏற்றுமதி முனைப்பான முனைப்பான முக்கியத்துவம் பெற்று விட்டதோ, சர்வதேச டிரஸ்டுகளுக்கிடையில் உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளுக்கிடையே பங்கிடப்படுவது நிறைவு பெற்று விட்டதோ, அக்கட்டத்திலான முதலாளித்துவமே ஏகாதிபத்தியமாகும்” (பக்கம் 142)

8. முதலாளித்துவத்தின் புல்லுருவித்தனமும் அழுகலும்

“ஏகபோகமே ஏகாதிபத்தியத்தின் ஆழ்நிலைப் பொருளாதார அடிப்படையாகும்…. இது முதலாளித்துவ ஏகபோகமாகும், அதாவது முதலாளித்துவத்திலிருந்து தோன்றி, முதலாளித்துவத்துக்கும் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்திக்கும் போட்டிக்குமான பொதுவான சூழலில், இந்தப் பொதுச் சூழலுக்கு நிரந்தரமான, தீர்வு காண முடியாத முரண்பாடான ஒன்றாய் நிலவும் ஏகபோகமாகும்.

ஆன போதிலும், எல்லா விதமான ஏகபோகத்தையும் போலவே இதுவும் தவிர்க்க முடியாதபடித் தேக்கத்துக்கும் அழுகலுக்குமான போக்கை உண்டாக்குகிறது. ஏகபோக விலைகள், தற்காலிகமாகவே ஆயினும், நிலைநாட்டப்பட்டிருப்பதால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இதன் விளைவாய் எல்லா முன்னேற்றத்துக்கும் உந்துவிசையாய் அமையும் காரணமானது ஓரளவுக்கு மறைந்து விடுகிறது, தவிரவும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வேண்டுமென்றே மட்டுப்படுத்துவதற்கான பொருளாதாரச் சாத்தியப்பாடு உதித்தெழுகிறது” (பக்கம் 159)

“ஏகாதிபத்தியத்தின் மிகவும் முக்கியமான பொருளாதார அடித்தளங்களில் ஒன்றான மூலதன ஏற்றுமதியானது, பண மூலதனத்தைக் கொண்டு சுகஜீவிகளாக வாழ்வோரைப் பொருளுற்பத்தியிலிருந்து மேலும் முழுமையாகத் தனிமைப்படுத்தி ஒதுக்குகிறது, கடல் கடந்த நாடுகளும் காலனிகளுமான சிலவற்றின் உழைப்பைச் சுரண்டி வாழும் புல்லுருவித்தனமானது ஒரு நாடு முழுவதையுமே பீடித்துக் கொள்கிறது” (பக்கம் 160)

“1) பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதி முதலாளித்துவமயமாகின்றது; 2) பாட்டாளி வர்க்கத்தில் ஒரு பகுதி, முதலாளித்துவ வர்க்கத்தால் விலைக்கு வாங்கப்பட்டு விட்ட, அல்லது எப்படியும் அதனால் ஊதியம் அளிக்கப்பட்டு வருகிற ஆட்களை தனக்குத் தலைமை தாங்க அனுமதிக்கிறது” (பக்கம் 173)

9. ஏகாதிபத்தியத்தைப் பற்றிய விமர்சனம்

10. வரலாற்றில் ஏகாதிபத்தியத்தின் இடம்

“ஒரு பெரிய தொழில்நிலையமானது பிரம்மாண்டமான பரிமாணங்களுடையதாகி, பெருந்திரளான புள்ளிவிவரங்களைத் துல்லியமாகக் கணிப்பதன் அடிப்படையில், கோடிக்கணக்கான மக்களுக்குத் தேவையான முழு அளவில் மூன்றில் இரண்டு அல்லது முக்கால் பங்காகிய பிரதான மூலப் பொருளை வழங்கும் பணியினை திட்டத்தின் பிரகாரம் ஒழுங்கமைத்திடுகையில்; இந்த மூலப்பொருள்கள் மிக்கப் பொருத்தமான உற்பத்தி இடங்களுக்கு, சில சமயங்களில் ஒன்றிலிருந்து ஒன்று நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலுமான மைல்கள் விலகியமைந்த இடங்களுக்கு, முறையாகவும் ஒழுங்கமைந்த முறையிலும் அனுப்பி வைக்கப்படுகையில்; மிகப் பலவகைகளிலான இறுதிப் பண்டங்களின் தயாரிப்பு வரையில் இப்பொருள்களைப் பதனம் செய்வதில் அடுத்தடுத்துள்ள எல்லாக் கட்டங்களையும் தனியொரு மையமானது நெறியாண்மை புரிகையில்; இந்தப்பண்டங்கள் ஒரே திட்டத்தின்படி கோடிக்கணக்கிலும், பத்து கோடிக்கணக்கிலுமான நுகர்வாளர்களிடையே வினியோகிக்கப்படுகையில்… அப்போது நாம் காண்பது… உற்பத்தியின் சமூகமயமாதலையே காண்கிறோம் என்பதும், உள்ளடக்கத்துக்கு இனி ஒவ்வாத மேலோடய் தனியார் பொருளாதார உறவுகளும் தனியார் சொத்துறவுகளும் அமைந்திருக்கின்ற, இந்த மேலோடு அகற்றப்படுவது செயற்கையான முறையில் தாமதப்படுத்தப்படுமாயின் தவிர்க்க முடியாத முறையில் இந்த மேலோடு அழுகியே செல்லும், அழுகிய நிலையில் ஓரளவு நீண்ட காலத்துக்கு இந்த மேலோடு இருந்து வரலாம் என்ற போதிலும் தவிர்க்க முடியாதபடி இம்மேலோடு எப்படியும் அகற்றப்பட்டு விடும் என்பதும் தெளிவாகவே விளங்குகின்றன” (பக்கம் 205)

பக்க எண்கள் – லெனின் நூல் திரட்டு 2-ல்

Leave a comment