சாதி வர்க்கம் மரபணு – ப கு ராஜன் : ஒரு விமர்சனமும் அதன் மீது ஒரு கருத்தும்

ந்தப் புத்தகம் புதுவிசை இதழில் வெளிவந்த இரண்டு கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

1. இந்தியச் சமூக கட்டமைப்பும் மரபணுவும்.

ஆரியர் – திராவிடர் விவாதம் இலக்கியம், தொல்பொருள் ஆய்வு, மொழியியல் என்ற தளத்திலிருந்து தற்போது மரபணு எனும் தளத்தில் நடந்து வருகின்றது. மற்ற எல்லா தளத்திலும் ஆரியர் வந்தேறிகள் அல்ல என வாதிடும் பார்ப்பனக் கூட்டம் தங்களது தரப்பை நியாயப்படுத்த இயலாததன் விளைவாக மரபணு அறிவியலின் மூலம் அதனை நிறுவ முயற்சிக்கின்றன. ஆனால் இதிலும் அவர்கள் (கட்டுரை எழுதப்பட்ட காலத்தில் இல்லாவிட்டாலும்) இன்று ஒரு தீர்மானகரமான தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

How genetics is settling the Aryan migration debate

சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

இந்த விசயத்தில் மரபணு ஆராய்ச்சி என்பது பார்ப்பனக் கூட்டத்தின் வாயை அடைப்பதற்குப் பயன்படும். மற்றபடி மரபணு ஆராய்ச்சி சாதியைப் புரிந்து கொள்ள புதிதாக எதையும் வழங்கவில்லை.

2. சாதியும் வர்க்கமும்.

  1. இந்திய இடதுசாரிகள் சாதியைக் கணக்கில் கொள்ளத் தவறிவிட்டனர்.
  2. ஆதிக்க சாதியினரே ஆளும் வர்க்கமாக உள்ளனர். சாதியப் படிநிலையில் கீழ் தட்டில் உள்ளவர்கள் தான் வர்க்கப் படிநிலையிலும் அடித்தட்டில் உள்ளனர்.
  3. இடதுசாரிகள் சாதியைக் கணக்கில் கொள்ளாததன் விளைவு, தமிழகத்தில் அதனைக் கையிலெடுத்த திராவிட இயக்கம் வளர்வதற்கு காரணமாயிற்று.
  4. நக்சல்பாரி இயக்கங்கள் சாதியைக் கையிலெடுக்காததன் விளைவு தலித் இயக்கங்களின் வளர்ச்சிக்கு அடிகோலின.
  5. இந்தியாவில் உள்ள எல்லா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழுவிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சாதியைக் கணக்கில் கொள்ளாததன் விளைவைப் புரிந்து கொள்ள முடியும்.
  6. சோசலிசம் வரும் வரை சாதி அடக்கு முறையைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா?

அ. மார்க்ஸ், ரவிக்குமார், காஞ்சை அயிலையா தொடங்கி ஆதவன் தீட்சண்யா, புனித பாண்டியன் வரை, முன்வைக்கும் அதே வாதங்கள்.

இந்தக் கேள்விகளில் உள்ள உண்மை எல்லாக் கம்யூனிச இயக்கங்களும் நடைமுறையில் சந்திக்கும் பிரச்சனைகளில் தெளிவாகத் தெரிகின்றன.

மற்ற எல்லா எழுத்தாளர்களையும் போல கட்டுரை ஆசிரியரும் கேள்வியை மட்டும் கேட்டு விட்டு நகர்ந்து சென்று விடுகிறார். பதிலுக்கான முதல் அடியை யார் எடுத்து வைப்பது?

– வின்சென்ட்

இதன் மீதான கருத்து குமரன்

நல்ல மதிப்புரை.

சாதிய பிரச்சனைக்கான தீர்வு என்பது சாதிய கட்டமைப்பின் மரபணு(!)வை ஆய்வு செய்து அது எப்படி இயங்குகிறது, எப்படி கடத்தப்படுகிறது, எப்படி தளைக்கிறது என்ற அறிவை தொழிலாளி வர்க்கத்துக்குக் கொண்டு சேர்ப்பதில் இருக்கிறது. அந்த ஆய்வின் ஊடாகவும், அதை நடைமுறைப்படுத்தும் செயல்பாட்டின் ஊடாகவும் சாதியை அழித்தொழிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய முடியும்.

இந்தப் புத்தகம் 2008-ல் எழுதப்பட்ட கட்டுரைகளை கொண்டது (என்று நினைவு). அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்சனையில் கவனத்தை செலுத்திய ப.கு ராஜனின் சிந்தனைப் போக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், அவர் அ.மார்க்ஸ், காஞ்சா அய்லய்யா போல தனிநபராகவோ, ரவிக் குமார், புனித பாண்டியன் போல அடையாள அரசியலிலோ இல்லாமல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார். சி.பி.எம் கட்சிக்குள் இருக்கும் அவர் கட்சி நிலைப்பாட்டில் இல்லாத, அந்த நிலைப்பாட்டை விமர்சிக்கும் இது போன்ற புத்தகத்தை எழுதி வெளியிடுகிறார். சாதி பற்றிய இத்தகைய கருத்தை பொதுவில் பேசிக் கொண்டே கட்சிக்குள் தொடர்ந்து செயல்படுகிறார். அப்படியானால், கட்சிக்குள்ளும் இது போன்ற விவாதங்களை நடத்துவார் என்று ஊகிக்கலாம்.

இதை சி.பி.எம்-ன் சீர்குலைவாக பார்ப்பதா அல்லது வரவேற்க வேண்டிய ஒரு போக்காக கருதுவதா?

கட்சியின் முடிவுகளை அமல்படுத்துவதில் கட்டுப்பாடு, அதே நேரம் அனைத்து விதமான கருத்து வேறுபாடுகளையும் கட்சிக்குள்ளும் வெளியிலும், பொறுப்புடன் விவாதிக்கும் உரிமை என்பது சரியான கட்சி நடைமுறையாக இருக்குமா?

Leave a comment