தொழிலாளி வர்க்க ஒற்றுமையை குலைக்கும் குறுங்குழுவாதம்

அகிலத்தில் கற்பனையான பிளவுகள் என்ற தலைப்பில் மார்க்ஸ்-எங்கெல்ஸ்

3

“எண்ணக் கோளாறுகளையும், பகைமைகளையும் கொண்ட குறுங்குழுவாத அமைப்புகளுக்கு மாறாக அகிலம், முதலாளிகளுக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் எதிராக, அரசு என்ற அமைப்பில் திரட்டப்பட்டிருக்கும் அவர்களுடைய வர்க்க அதிகாரத்துக்கு எதிரான பொதுப் போராட்டத்திற்காக அனைத்து நாட்டு தொழிலாளர்களும் ஒன்றுபட்டுள்ள உண்மையான போர்க்குணமிக்க அமைப்பு ஆகும்.”

அதாவது, இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த, அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டிய பொது அமைப்பாக அகிலம் திகழ வேண்டும்.

அகிலத்தில் இணைந்துள்ள தொழிலாளர் அமைப்புகள், “அனைத்தும் ஒரே குறிக்கோளை பின்பற்றுகின்றன. ஒரே திட்டத்தை ஏற்றுக் கொள்கின்றன. அந்தத் திட்டம் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பொதுவான உருவரையை மட்டும் தருகிறது. அதைக் கோட்பாட்டு ரீதியில் விரித்துரைப்பது கிளைகளின் நடைமுறை போராட்ட தேவைகளினாலும், கிளைகளில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதாலும் வழிகாட்டப்படுகிறது. அக்கிளைகள் தமது நிறுவனங்களிலும், காங்கிரஸ்களிலும் பல்வேறு வகையிலான சோசலிச நிலைப்பாடுகளை கொண்டவர்களையும் எந்தத் தடையும் இன்றி அனுமதிக்கின்றன.”

அதாவது, ஐரோப்பாவுக்கு இணையான நிலப்பரப்பையும், பல்தேசிய மக்கள் திரளையும் கொண்ட இந்தியாவில் அகில இந்தியாவுக்கும் ஒரு பொதுவான உருவரை மட்டுமே இருக்க முடியும். அவற்றை அந்தந்த மாநில நிலைமைகளுக்கு ஏற்ப, போராட்ட தேவைகளின் அடிப்படையிலும், பகுதி விவாதிங்களின் அடிப்படையிலும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

இதுவும் கடந்த 50 ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அனுபவங்களில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நாடு தழுவிய அளவில் தொழிலாளி வர்க்கக் கட்சிக்கான ஒன்றுபட்ட கோட்பாடு இருந்தாலும் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு நிலைப்பாடு, அரசியல் கூட்டணிகள், செயல்பாடுகள் தேவைப்படுவது தெளிவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தோன்றிய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி 40 ஆண்டுகள் செயல்பாட்டுக்குப் பிறகு குறுங்குழுக்களாக சிதறியதற்கான காரணம் என்ன?

பொதுவாகச் சொல்லப் போனால், “ஒவ்வொரு புதிய வரலாற்றுக் கட்டத்திலும் பழைய தவறுகள் சிறிது நேரம் தோன்றிவிட்டு உடனே மறைவதைப்போல அகிலத்தின் உள்ளேயும் குறுங்குழுவாதப் பிரிவுகளின் புத்துயிர்ப்பு நிகழ்ந்தது. ஆனால், அவை அவ்வளவு வெளிப்படையான வடிவத்தில் இருக்கவில்லை.”

மேலும், இந்தியாவில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி உடைந்து 3-4 பெரிய கட்சிகளாகவும், பல டஜன் சிறிய குழுக்களாகவும் இன்று செயல்படுவதற்கு குறிப்பான வரலாற்றுக் காரணங்களும், இந்தியாவின் தனிச்சிறப்பான நிலைமைகளும் காரணமாக இருந்திருக்கின்றன.

இந்தியாவில் சிதறுண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளும், குழுக்களும் ஒவ்வொன்றும் போல்ஷ்விக் மயமான, கட்டுப்பாடான, வெளியிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதான அமைப்பு வடிவத்தை வரித்துக் கொண்டன. குறுங்குழுக்கள் என்று யாரும் சொல்லி விடாத வகையில் ஒவ்வொன்றும் தம்மை தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் ஒரே பிரதிநிதியாக அறிவித்துக் கொண்டு செயல்பட தொடங்கின. ஆனால், மேலே சொன்னது போல ஒன்றுக்கு மேற்பட்ட அத்தகைய நாடு தழுவிய அமைப்புகள் இருப்பதே அவை ஒவ்வொன்றும் சிதைந்து போவதற்கான உறுதியான வழியாக உள்ளது.

இந்த குழுக்கள் தனியாக பிரிந்து வந்ததற்கும், தனியாக செயல்படுவதற்கும் அமைப்பு ரீதியான விதிகளின்படி எந்த நியாயப்படுத்தலும் கிடையாது. கட்சி விதிமுறைகள், கட்சி காங்கிரஸ், தலைமைக் குழு, விதிகளுக்குட்பட்ட சுயேச்சையான நடவடிக்கைகள் என்ற framework-க்கு உள்ளேதான் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். இது அகிலம் தொடர்பான மார்க்சின் பகுப்பாய்விலும், ரசியாவில் ஒன்றுபட்ட கட்சியை நிறுவி பராமரிப்பதற்கான லெனினின் போராட்டத்திலும் தெளிவாக வெளிப்படுகிறது.

எனவே, ஒவ்வொரு கட்சியும் நடைமுறை அரசியல் ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் தாம் தனியாக செயல்படுவதற்கான நியாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தக் குழுங்குழுக்கள் ஒவ்வொன்றும் தம்மை எப்படி பார்க்கின்றன.?

“இந்தக் குறுங்குழுக்கள் புத்துயிர் பெற்றிருப்பது முன்னோக்கி வைக்கப்பட்ட மாபெரும் காலடி என்று” ஒவ்வொன்றும் கருதுகின்றன. (பக்கம் 186)

“சுதந்திரமாக இணைந்திருக்கின்ற, எல்லா விதமான அதிகாரத்திலிருந்தும் விடுதலையடைந்த” இந்தக் குறுங்குழுக்களின் “நோக்கம் என்னவாக இருக்கும்?” (பக்கம் 196)

“மனிதகுலத்தின் புதிய நோக்கங்களின் உண்மையான பிரதிநிதியாக தொழிலாளர் வர்க்கத்தை ஆக்க வேண்டுமானால், அதன் அமைப்பு வெற்றி பெறப் போகின்ற கருத்தின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். நமது சகாப்தத்தின் தேவைகளிலிருந்தம், மனிதகுலத்தின் உயிராதாரமான இலக்குகளிலிருந்தும், சமூக வாழ்க்கையின் நிகழ்வுகளை முரணின்றி ஆய்வு செய்து இந்தக் கருத்துக்களை வளர்த்தெடுக்க வேண்டும். பின்னர் இந்தக் கருத்துக்களை தொழிலாளர் அமைப்புகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதுவே நமது நோக்கம். இறுதியாக, தொழிலாளர் திரளின் மத்தியில் ஒரு புரட்சிகர சோசலிச பள்ளியை ஏற்படுத்த வேண்டும்” (பக்கம் 197) – இது பக்கூனின் குழுவின் அறிக்கை சொல்வது.

இதற்கு மார்க்ஸ் “இவ்வாறு தன்னிச்சையான தொழிலாளர் கிளைகள் விரல் சொடுக்கும் நேரத்தில் பள்ளிகளாக மாற்றப்படுகின்றன. அவற்றில் இந்தக் கூட்டணியின் கனவான்கள் போதகர்களாக இருப்பார்கள். அவர்கள் முரணில்லாத ஆய்வுகள் மூலம் கருத்தை வளர்த்தெடுப்பார்கள். அவர்கள் இந்தக் கருத்தைப் பின்னர் தொழிலாளர் அமைப்புகளுக்குக் கொண்டு செல்வார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் தொழிலாளி வர்க்கம் ஒரு இலக்கு பொருள், அவர்களது புனித ஆவியை செலுத்திய பிறகுதான் வடிவம் பெறக் கூடிய குழப்பங்களாக உள்ளது.” என்று விளக்கம் கொடுக்கிறார்.

அதாவது, ஒவ்வொரு கட்சியும், குறுங்குழுவும் தன்னிடம் வெல்ல முடியாத ஒரு கருத்து இருப்பதாகவும், அதை தொழிலாளர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் புரட்சியை நடத்தலாம் என்றும் கருதிக் கொள்கிறது. உண்தையில், இந்தியாவில் பெரும்பாலான கம்யூனிஸ்ட் கட்சிகள் தம்மை தொழிலாளி வர்க்கத்துக்கான கட்சி என்று பாவனை செய்வதைக் கூட விட்டு விட்டு அனைத்து மக்களுக்குமான மக்கள் திரள் அரசியலில் மூழ்கி விட்டிருக்கின்றன. மார்க்சியம் கோரும் வர்க்க அரசியலை தொழிற்சங்க போராட்டம் என்ற அளவில் நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
கீழே வருபவை ஒன்றுபட்ட, மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை மறுக்கும் பக்கூனின் அதிகார மறுப்பு அல்லது அரச மறுப்பு வாதம்.

“… சமூக ஜனநாயகத்துக்கான கூட்டணி தனது தனிச்சிறப்பான குறிக்கோளாக அரசியல் மற்றும் தத்துவார்த்தை பிரச்சனைகளை ஆய்வு செய்வதை வரித்துக் கொள்கிறது.”

“அகிலம் தனக்கென அமைத்துக் கொள்ளும் அமைப்பை பொதுமைப்படுத்துவதாகவே எதிர்கால சமூகம் அமையும். எனவே, இந்த அமைப்பை நமது லட்சியத்துக்கு எவ்வளவு நெருக்கமாகக் கொண்டு வர முடியுமோ அவ்வளவு நெருக்கமாகக் கொண்டு வர வேண்டும்”

“ஒரு எதேச்சதிகார அமைப்பு முறையிலிருந்து சுதந்திரமும் சமத்துவமும் நிலவும் தோன்றி வளரும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அது நடைபெற முடியாத ஒன்று. எதிர்கால மனித சமூகத்தின் கருவான அகிலம், இனிமேல் நமது கொள்கைகளான சுதந்திரம், கூட்டமைப்பு ஆகியவற்றின் உண்மையான பிம்பமாக இருக்க வேண்டும்.”

இதைப் பற்றி மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார்.

“இவர்களது ஆசிரியரான பக்கூனின் போர்க்குதிரை அராஜகவாதம் – அல்லது அரச மறுப்பு வாதம் – அல்லது அதிகார மறுப்பு வாதம் என்பதுதான். சோசலிஸ்டுகள் அனைவரும் அதிகார மறுப்பு வாதத்தை பின்வரும் திட்டமாக பார்க்கின்றனர்: “தொழிலாளி வர்க்க இயக்கத்தின் இறுதி லட்சியமான வர்க்கங்களை ஒழித்துக் கட்டுவது சாதிக்கப்பட்டவுடன், பெரும்பான்மை உற்பத்தியாளர்களை மிகச் சிறு எண்ணிக்கையிலான சிறுபான்மை சுரண்டல்காரர்களின் பிணைப்பில் வைத்திருக்கும் அரசின் அதிகாரம் மறைந்து போகிறது. அரசாங்கத்தின் செயல்பாடுகள் எளிய நிர்வாக செயல்பாடுகளாக மாறுகின்றன”.

“அராஜகவாதமோ, சுரண்டல்காரர்களின் கைகளில் சக்திவாய்ந்த முறையில் குவிக்கப்பட்டிருக்கும் சமூக அரசியல் சக்திகளை நொறுக்குவதற்கு மிகவும் நிச்சயமான வழியாக தொழிலாளி வர்க்க அணிகளுக்கு மத்தியில் அதிகார மறுப்பு வாதத்தை முன் வைக்கிறது.”

பகுதி 1 பகுதி 2

அகிலத்தில் கற்பனையான பிளவுகள் என்ற தலைப்பில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுதிய கட்டுரை – மார்க்ஸ் – எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் – தொகுதி 7 (பக்கம் 134 – கடைசி கட்டுரை)

ஆங்கில தொகுதி நூல்களில் (Marx & Engels Collected Works Volume 23 – Fictitious Splits in the International – Page 79)அகிலத்தில் கற்பனையான பிளவுகள் என்ற தலைப்பில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் – 2